கண்ணதாசனுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் சொல்லத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும் பட்சத்தில் அதை ஒப்புக் கொள்ளத் தயங்கியதும் இல்லை.
‘இந்திய ஜனாதிபதியை போல் சம்பளம் பெறுகிறேன். ஆனால், இந்தியாவைப் போல் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிடுவார். தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்ட ஆளுமைகள் யாருமில்லை.
காந்தியின் சுயசரிதையை போலவே தனது வாழ்க்கை வரலாற்றை உண்மையுடனும் நேர்மையுடனும் ‘வனவாசம்’ மற்றும் ‘மனவாசம்’ ஆகிய நூல்களில் பதிவு செய்தார்.
‘ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது. அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்’ என முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பார்.
மனித மனத்தின் லௌகீக ஆசைகளுக்கும், இறைவன் குறித்த தேடலுக்குமான ஆகச் சிறந்த உதாரணம் என்றால், முத்தையா எனும் கண்ணதாசனின் வாழ்க்கை தான்.
தலைமுறைகளைத் தாண்டி, தலைமுறை இடைவெளியைத் தாண்டி இன்றும் நம் நெஞ்சில் குடியிருந்து, மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மகோன்னத மனிதர்களிடம் தான், மரணம் கூட தோற்றுவிடுகிறது. கவிஞனில் கண்ணதாசன் ஒரு காலக்கணிதம். மரணத்தையும் தோற்கடித்த மகா கவிஞன்.


