பாஜக கூட்டணியை விட்டு முதலமைச்சர் ரங்கசாமி வெளியேறினால் அடுத்த நிமிடம் திகார் சிறையில் இருப்பார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
மேலும் மருந்து ஊழலில் முதலமைச்சர் ரங்கசாமியையும் உட்படுத்த வேண்டும் என்றும், நானும் எனது குடும்பத்தினரும் எந்த விசாரணைக்கு தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தேர்தல்துறை தந்த சிறப்பு சீர்த்திருத்த வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்ய மக்கள் சிரமப்படுகிறார்கள். இதை பூர்த்தி செய்து படிவம் தராவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்காது. இது ஜனநாயக படுகொலை. பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் துறை வாக்குகளை பறிக்க பார்க்கிறது. வாக்கு திருட்டுக்கு வழிவகுக்கும். இதற்கு எதிராக 3 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம் என கூறினார்.
மேலும் புதுச்சேரியில் 2019-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட மருந்துகள் இரண்டு மாதத்தில் வீரியம் முடிந்துவிடும் என தெரிந்தும் அதிகாரிகளால் வாங்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு மருந்து வாங்கியதில் உள்ள ஊழலில் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்களோ அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பான கோப்பு எனக்கு வரவில்லை. இதற்காக சிபிஐயோ அல்லது எந்த விசாரணை வைத்தாலும் அதற்கு நான் தயாராக உள்ளேன்.
அதே நிறுவனத்தில் இரண்டு மாதத்தில் முடிகின்ற வீரியம் குறைந்த மருந்தை 2021 வரை வாங்கியுள்ளனர். 2021-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ரங்கசாமி என்றும், சுகாதார துறையும் அவர் கையில் தான் உள்ளது. எனவே இந்த விசாரணை 2019-ஆம் ஆண்டுடன் முடித்து விடக்கூடாது. 2021-ம் ஆண்டு வரை தொடர வேண்டும். இந்த விசாரணைக்கு முதல்வரை உட்படுத்த தயாரா என பாஜகவும் என்.ஆர் காங்கிரசும் பதில் சொல்ல வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், இந்த மருந்து ஊழலில் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு சிலர் எனது குடும்பத்தினரையும் இதில் இழுத்து உள்ளனர். எனது குடும்பத்தினரும் விசாரணைக்கு தயாராக உள்ளோம் என்றார். மேலும் என்.ஆர்.காங்கிரசை பலகீனப்படுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. பாஜக தற்போது மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாஜக, இரண்டாவது பாஜகவின் பி.டீமாக உள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மூன்றாவது அணியாக மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் உள்ளனர்.
ஆனால் முதல்வர் ரங்கசாமி அமைதியாக உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி. ஆட்சியில் இருக்க வேண்டும் நாற்காலி வேண்டும் மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. முதலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். உண்மையில் முதலமைச்சர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினால் அடுத்த நிமிடம் திகார் சிறையில் இருப்பார். என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியை தூக்கி எறிய மக்கள் தயாராக உள்ளனர். நான் எவ்விதத்திலும் ரங்கசாமியை ஆதரவிக்கவில்லை. அவர் ஊழல் பெருச்சாளி என்று தெரிவித்தார்.


