திருப்பதி மலையில் அனுமான் ஜெயந்தி
ஜபாலி ஆஞ்சநேயருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பட்டு வஸ்திர சமர்ப்பணம்.
பிராந்திய நம்பிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்தியாவில் அனுமார் ஜெயந்தியை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் ஆண்டுக்கு இரண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மார்கழி மாத மூல நட்சத்திர நாளில் அனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வேறொரு நாளில் அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் இன்று ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அனுமான் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பதி மலையிலும் தேவஸ்தானம் சார்பில் அனுமான் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு ஏழுமலையான் கோவிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்களை சுமந்து சென்று பாபநாசம் பகுதி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் ஜபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார்.
தொடர்ந்து அங்கு ஆஞ்சநேயரை வழிபட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி பட்டுவஸ்திர சன்மானம் நடத்தப்பட்டது.
அதேபோல் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோவில், ஆகாச கங்கையில் இருக்கும் பாலா ஆஞ்சநேயர் சுவாமி கோவில் ஆகியவற்றிலும் அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன.