லேப்டாப் ஆர்டர் செய்ததில் அடாப்டர் ஒயர் மட்டுமே வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக லேப்டாப் ஆர்டர் செய்ததில் அடாப்டர் ஒயர் மட்டுமே வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி…..
பாதிக்கப்பட்ட நபர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…..
திருவண்ணாமலை போளூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பிரபு (46). இவரது மகன் படிப்பதற்காக அமேசான் இணையதளத்தின் மூலமாக கடந்த மாதம் 18ம் தேதி ASUS என்ற நிறுவனத்தின் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார்.
இதற்காக 61,990 ரூபாய் ஆன்லைன் மூலமாக செலுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 21ம் தேதி அமேசான் டெலிவரி ஏஜென்சி மூலமாக பிரபு முகவரிக்கு லேப்டாப் பார்சல் வந்துள்ளது.
இதனை பெற்றுக் கொண்டு பிரித்துப் பார்த்தபோது அதில் லேப்டாப் இல்லை. அடாப்டர் மற்றும் வயர் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்துள்ளார். நிறுவனத்தில் இருந்தவர்கள் அதனை ரிட்டன் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பின்னர் அதனை டெலிவரி ஏஜென்சிகள் ரிட்டன் எடுக்காமல் நீங்கள் அமேசான் நிறுவனத்திலேயே புகார் அளியுங்கள் என கூறி திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக தினம்தோறும் அமேசான் நிறுவனத்தின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் தினந்தோறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் வழங்கும் தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்தும் பலன் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பிரபு இன்று திருவண்ணாமலை மாவட்ட சைபர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் இதுபோன்று பல மோசடிகளில் ஈடுபடுவதாக கூறி பிரபு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அமேசான் பிராடு, அமேசானில் பொருள் வாங்க வேண்டாம் என பல்வேறு வாசகங்களை எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்கல் எந்த பொருட்களாக இருந்தாலும் பொதுமக்கள் அனைவரும் நேரில் அணுகி பொருட்களை வாங்க வேண்டும் எனவும், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பொருட்களை வாங்கி பாதிக்கப்பட வேண்டாம் எனவும், தான் முறையாக ஆன்லைனில் முழுமையாக பணத்தை செலுத்தி லேப்டாப்பை வாங்கி உள்ளதாகவும் அதனை பிரிக்கும் போது செல்போனில் படம் எடுத்துள்ளதாகவும் ஆகவே அமேசான் நிறுவனம் உடனடியாக தனக்கு லேப் டாப் வழங்க வேண்டும், தான் செலுத்திய பணத்தை திரும்ப எனக்கு வழங்க வேண்டும் இல்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பிரபு தெரிவித்தார்.


