நவதிருப்பதி ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா
நவதிருப்பதிகளில் முதன்மையானதாக விளங்கும் ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தோ்வடம் பிடித்து இழுத்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் நவராத்திரி விழா, வைகுண்ட ஏகாதசி, தேரோட்டத் திருவிழா, புரட்டாசி வழிபாடு பிரம்மோற்சவம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் வருடத்திற்கு நான்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பங்குனி சித்திரை மூலவா் ஸ்ரீஆதிநாதருக்கும் மாசி. வைகாசி சுவாமி நம்மாழ்வாருக்கும் பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டிற்கான அருள்மிகு பொலிந்துநின்றபிரான் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தினைத்தொடர்ந்து நாள்தோறும் உற்சவா் பொலிந்து நின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.
9ம் திருநாளான இன்று திருத்தோ் வைபவம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6.45 க்கு மேல் 7.15 மணிக்குள் ரிஷப லக்னத்தில் சுவாமி பொலிந்துநின்றபிரான் தேருக்கு ஏழுந்தருளினாா். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதும் சுவாமி பொலிந்து நின்றபிரானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து திருமாளிகை சுவாமிகள் பக்தா்கள் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தனா். ரதம் நான்கு ரதவீதிகளில் வலம் வந்ததது. நாளை தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.