உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கலெக்டர்,எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

100க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி காவலான்கேட், மேட்டுத் தெரு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை என நகரின் முக்கிய விதிகள் வழியாக பேருந்து நிலையம் வரைச் சென்று முடிவுற்றது.
பேரணியில் “செய்யாதே செய்யாதே குழந்தை திருமனம் செய்யாதே”, “தொடாதே தொடாதே பெண் குழந்தைகளை தொடாதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும், கோஷங்கள் எழுப்பப்பட்டும், குடும்ப நல முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர்,சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டும்,துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


