அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், பல்கலைக்கழகத்தில் இருந்து அயற் பணியிடங்களுக்கு சென்ற பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் கடந்த 10 தேதி தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் இன்று 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர் போராட்டத்தில் பேராசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு விசிக, பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்டா அரசியல் கட்சியினரும் பேராசிரியர்களுக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனவே உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசும் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களின் இந்த நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


