மயிலாடுதுறை தக்வா பள்ளிவாசல் மீது முறைகேடு புகார்.
மயிலாடுதுறை தக்வா பள்ளிவாசல் மீது முறைகேடு புகாரையடுத்து, மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர் நேரில் ஆய்வு. நிர்வாகம் முறைப்படி செயல்படுவதாகவும், ஜமாத்தை சேராத வெளிநபர்கள் நிர்வாகம் குறித்து குற்றச்சாட்டு வைப்பதை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு அனுமதிக்காது என்றும் கூட்டமைப்பின் தலைவர் பேட்டி.
மயிலாடுதுறை ஹாஜியார் நகர் ஆற்றங்கரை அருகில் தக்வா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் கட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாசின்-சேமா தம்பதியினர் 2003-ஆம் ஆண்டு பிஸ்மி அறக்கட்டளை நிறுவனர் ரபிக் ஹாஜியார் என்பவரிடம் 2,800 சதுர அடி நிலம் தானமாக வழங்கிய நிலையில்,
அதே ஆண்டு அந்த இடத்தில் 700 சதுர அடியில் தனது சொந்த நிதியில் ரபீக் ஹாஜியார் பள்ளிவாசல் கட்டடம் அமைத்தார். பின்னர், இக்கட்டடம் 2010-ஆம் ஆண்டில் பிஸ்மி அறக்கட்டளை மூலமாகவும், பின்னர் 2015-ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் வழங்கிய நிதி மூலமாகவும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 2,800 சதுர அடியிலும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

இந்த பள்ளிவாசலில் 160 குடும்பத்தினர் உறுப்பினராக உள்ளனர். இப்பள்ளிவாசலிலில் கடந்த ஆண்டுவரை நிலத்தை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிய முகமது யாசின் தலைவராக இருந்த நிலையில், அவரது இறப்புக்குப் பின்னர் தற்போது ஹாஜா மைதீன் என்பவர் தலைவராக உள்ளார். செயலராக முகமது இஸ்மாயில், பொருளாளராக சையது உமர் உள்ளனர்.
இந்நிலையில், பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிலர் குற்றச்சாட்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் சபீர்அகமது மற்றும் நிர்வாகக்குழுவினர் தக்வா பள்ளிவாசலில் ஆய்வு நடத்தினர். பின்னர், இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் சபீர்அகமது கூறுகையில்,
அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தததில், அறக்கட்டளை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதும், முகமது யாசின் மூலம் அமைக்கப்பட்ட நிர்வாகம் முறைப்படி செயல்படுவதும் உறுதியாகியுள்ளது. இந்த ஜமாத்தை சேராத வெளிநபர்கள் நிர்வாகம் குறித்து குற்றச்சாட்டு வைப்பதை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு அனுமதிக்காது என்றார்.


