பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு
சென்னையில், மாநில அளவில் ஆதரவற்ற பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கு இடையில் நடந்த விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்று தஞ்சைக்கு ரயிலில் வந்து இறங்கிய மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தைகள் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அரசு விடுதிகளில் தங்கி படித்து வரும் ஆதரவற்ற மாணவ மாணவிகள் இடையில் மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடந்தன
தஞ்சை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களாக போட்டிகள் நடைப்பெற்றன.
மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
தஞ்சை மண்டலம் சார்பில் 52 மாணவிகள், 36 மாணவர்கள் என 88 பேர் பங்கேற்றனர்.

அத்லட்டிக் வாலிபால், கபடி, பேட்மிட்டன் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும், ஓவியம், நடனம், பாட்டு உள்ளிட்ட அனைத்து கலை நிகழ்ச்சிகள் போட்டிகளிலும் வென்று தஞ்சை மண்டலம் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்றனர்.
வெற்றி கோப்பையுடன் ரயில் மூலம் தஞ்சை ரயில் நிலையம் வந்து இறங்கிய மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


