சபரிமலையில் கொடிய விஷமுள்ள “ராஜ நாகம்” பிடிபட்டது!
பிரசித்தி பெற்ற சபரிமலை சன்னிதானத்திற்கு பின்புறம் திருநீர்குளம் அருகே கொடிய விஷமுள்ள ராஜநாகம் பிடிபட்டது.
மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை (16.07.25) நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
அப்போது, சபரிமலை சன்னிதானத்திற்கு பின்புறம் திருநீர் குளத்தருகே உள்ள, ராஜநாகம் இருப்பது குறித்து தூய்மைப் பணியாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
நிகழ்விடம் வந்த வனத்துறையினர் சீறிய ராஜநாகத்தை லாவகமாய் பிடித்தனர்.
பிடிபட்ட ராஜ நாகம் பாதுகாப்பாக வனத்துறை வாகனத்தில் பம்பை கொண்டு செல்லப்பட்டது.
பின், அந்த ராஜ நாகம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு வனதிற்குள் விடப்பட்டுள்ளது.
எனவே, ஐயப்ப பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட வனப்பாதையை தவிர, தடையை மீறி வனத்திற்குள் செல்லக்கூடாது என தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.


