அமெரிக்கா, இஸ்ரேலால் இரான் டெஹ்ரானில் ‘கருப்பு மழை’.
எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதல்கள் குடியிருப்புவாசிகளுக்கு தீவிரமான உடல்நல ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், திங்கட்கிழமை டெஹ்ரான் முழுவதும் எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் அவற்றிலிருந்து புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
பிப்ரவரி 28-ஆம் தேதி இரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து அதன் தலைநகரில் குறைந்தது நான்கு எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாங்கள் உறுதிசெய்திருக்கிறோம்.
நகரின் சில பகுதிகளில் புகை மற்றும் மாசுபாட்டால் சூரியன் மறைக்கப்பட்டதாகவும் தீப்புகையின் கடும் வாசனையை உணர முடிவதாகவும் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். வெளியாகும் சில மாசுபாடுகள் “முன்பு இல்லாத அளவுக்கு” இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரான் தலைநகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் எண்ணெய் வளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அந்நகரில் சுமார் ஒரு கோடி பேரும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல லட்சக்கணக்கானோரும் வசிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாங்கள் “கருப்பு மழையை” எதிர்கொண்டதாக டெஹ்ரான் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மாசு காரணிகளுடன் கலந்து கருப்பாக பொழியும் மாசுபட்ட மழைப்பொழிவை குறிக்கும் வழக்கமான வார்த்தையே ‘கருப்பு மழை’.
மழைப்பொழிவின் மூலம் மாசு காரணிகள் காற்றின் மூலம் “அடித்துச் செல்லப்படுவது” வழக்கமானது, ஆனால் கருப்பு மழை என்பது அரிதானது. அதிகளவிலான புகைக்கரித் துகள்கள் மற்றும் மற்ற மாசு காரணிகளின் விளைவே இது என, பிபிசி வெரிஃபையிடம் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
“இதில் மழைத்துளிகள் பஞ்சு அல்லது காந்தம் போன்று செயல்பட்டு, அவை விழும்போது காற்றில் உள்ள அனைத்தையும் சேகரித்து பொழியும், அதனால்தான் குடியிருப்புவாசிகள் அதனை ‘கருப்பு மழை’ என்ம விவரிக்கின்றனர்,” என அக்ஷய் டியோரஸ் தெரிவித்தார்.
சில பெரிய துகள்கள் மழையே இல்லாமல் காற்றின் மூலம் அடித்துச் செல்லப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது.


