கச்சத்தீவு ஆலய விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து படகுகளில் பக்தர்கள் பயணம்
தமிழகத்துக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (27ந் தேதி) தொடங்கி நாளை – 28 ம் தேதி வரை நடக்கிறது.
இன்று மாலை 4:30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியானது ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி நடைபெற்று, நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
இரவில் தேர் பவனி நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
இதன் பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் பங்கேற்க இன்று காலை முதல் தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் குவிந்தனர்.
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் இன்று காலை 6 மணியில் இருந்து ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டது. ஏற்கனவே பதிவு செய்தவர்களை, அதிகாரிகள் ஆவணங்களை பரிசோதித்து அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் இலங்கை கச்சத்தீவு சொல்லும் பக்தர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

