நல்லகண்ணு அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சி
நல்லகண்ணு அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சி நலம் விசாரித்துக் கொண்ட திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து செவ்வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் திமுக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பேரிழப்பு. பொது வாழ்க்கையில் இதயம் விரும்பாத நபராக இருந்து வந்துள்ளார்.
ஆனாலும் இது ஒரு நல்ல நிகழ்வு அனைத்து கட்சியினரையும் நல்லகண்ணு ஒன்று சேர்த்துள்ளார் என பேசினார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது,
அரசு மருத்துவமனை கொடுக்கும் சிகிச்சை எனக்கு போதும் அரசு மருத்துவமனையில் தான் எனது உயிர் போக வேண்டும் என கடைசி வரை நல்லகண்ணு அவர்கள் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் என பேசினார்.
இந்நிகழ்வு முடிந்த பின்பு திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடல் நலம் குறித்து மாறி, மாறி விசாரித்துக் கொண்டனர்.
