பரமக்குடியில் மார்கழி பாவை நோன்பு விழா
கோலாட்டம், திருப்பாவை பாடல்களுடன் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீனாட்சி–சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பாவை நோன்பு பூஜைகள் தினசரி அதிகாலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கோயிலின் ராமகிருஷ்ண பஜனை மண்டபத்தில் நடைபெறும் இந்த வழிபாடுகளில் பெண்கள் திருப்பாவை பாடல்களைப் பாடியபடி கோலாட்டம் ஆடி விழாவை பக்தி பரவசமாக மாற்றினர்.மார்கழி பாவை நோன்பின் 24-வது நாளில், பஜனை கோஷ்டியினர் பெருமாள் பக்திப் பாடல்களுடன் வீதி வலம் வந்து கோயிலை அடைந்தனர்.
தொடர்ந்து மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சியம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாமா–ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் பெருமாளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர தீபம் காண்பிக்கப்பட்டது.
கல்கண்டு சாதம், புளியோதரை உள்ளிட்ட நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களுடன் பஜனை நடைபெற்றது.நிறைவாக ஐந்து முக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


