பாளையங்கோட்டை பள்ளியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பாளையங்கோட்டை பள்ளியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மழலைகளின் நடனம், நாடகத்துடன் உற்சாக விழா!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய கத்தீட்ரல் நர்சரி மற்றும் மேல்நிலைப் பள்ளியில், நர்சரி பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா இன்று பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக இப்பள்ளியில் முன்கூட்டியே சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், நர்சரி படிக்கும் பிஞ்சு குழந்தைகள் வண்ணமயமான உடைகளை அணிந்து வந்து, கிறிஸ்தவ பக்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், மழலைகள் தங்கள் மழலைக் குரலில் தேவ வசனங்களை அழகாக ஒப்புவித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம் மாணவர்களால் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 25-ஆம் தேதியின் சிறப்பு குறித்தும், இயேசுவின் பிறப்பு வரலாற்றையும் சிறிய குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் சிறப்பு பப்பட் பொம்மை மூலம் விளக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.


