தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா…
தடகள வீராங்கனை பி.டி. உஷா,எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.. அடுத்த ஒலிம்பிக்- ஆசிய போட்டிகளில் இந்தியா பல பதக்கங்களை வெல்லும்…பி.டி. உஷா நம்பிக்கை

திண்டிவனம் ஓம்கூரில் அமைந்துள்ள தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 17 மாணவர்கள் தங்கப் பதக்கங்களுடன் 153 பேர் பட்டங்களை பெற்றனர். தடகள வீராங்கனையும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான பி.டி. உஷா,எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டன.
மணக்குள விநாயகர் கல்விக் குழுமமும் தலைவரும் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தருமான தனசேகரன் தலைமை ஏற்க இந்தியாவிற்கான பிஜி நாட்டின் உயர் ஆணையர் ஜெகன்நாத் சமி, லைபீரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பெண்களை ஒன்றிணைத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் லேமா கோபோவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த பி டி உஷா,தனது விளையாட்டு பருவ காலத்தின் போது போதிய வசதிகள் இல்லை.. ஆனால் தற்பொழுது நிறைய வசதிகள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை விளையாட்டு வீரர்களுக்காக கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் தடகளப் போட்டியில் நிறைய வீரர்கள் முன்னேறி வருகின்றனர்.. அடுத்த ஒலிம்பிக் மற்றும் ஆசிய மற்றும் உலக அளவில் போட்டிகளில் இந்தியா பல பதக்கங்களை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் லேமா கோபோவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .. பொருளாதாரம் தொழில்நுட்பம் போன்றவற்றில் வளர்ச்சி பெற்றாலும் சில நாடுகளிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுக்க வேண்டும் என்றார்..


