அருப்புக்கோட்டை அருகே கீழ்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பக்கத்து மாவட்ட விவசாயிகள் மாடுகள் பயிர்களை அழித்து நாசம் செய்து வருவதாக புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு; உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்க போவதாக பேட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கீழ்க்குடி, மேலகள்ளக்காரி, கீழகள்ளக்காரி, கே.வாகைக்குளம், புரசலூர், கீழப்பட்டி, பூலாங்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேல் நெல், மக்காச்சோளம், உளுந்து, கரும்பு, மிளகாய், சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது.
இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் கே.வேப்பங்குளம், பம்மனேந்தல், வண்ணாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பசுமாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்காமல் இரவு நேரங்களில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழ்க்குடி மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் அவிழ்த்து விடுவதாக இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அடிக்கடி இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட பசு மாடுகளை அவிழ்த்து விடுவதால் விவசாய நிலங்களில் பயிர்களை மாடுகள் அழித்து விடுகின்றன. தற்போது வளர்ந்து வரும் பயிர் இந்த மாடுகள் அழித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாடுகள் தங்கள் விளைநிலங்களை அழித்து வருவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி கீழ்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட விவசாய கிராம மக்கள் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாரிமுத்துவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் கோட்டாட்சியரிடம் வேதனை தெரிவித்தனர்.
விவசாயிகள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் இது குறித்து விவசாயிகள் அளித்த பேட்டியில்,
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பசுமாடுகளை அவிழ்த்துவிட்டு தங்களது விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டை அனைத்தையும் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்தனர்.


