ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் ரதா ரோஹணம்
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரதா ரோஹணம் (கோ ரதம்) சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி, தமிழக திருப்பதி என்றும், தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், ஒரே தாயாரான பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
பொய்கையாழ்வார், பேயாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இத்தலம். இங்கு மூலவர் பெருமாளுக்கு எப்போதும் உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது.
தமிழக வைணவ தலங்களில் முதன்முதலில் இங்கு மட்டுமே துலாபாரம் அமைக்கப்பட்டது. என்பதும், திருமலை திருப்பதியை போலவே தமிழகத்தில் இந்த வைணவ தலத்தில் தான் புரட்டாசி பிரமோற்சவம் நடைபெறுகிறது என்பது சிறப்பு. இத்தகைய பெருமைக்குரிய இந்த வைணவ தலத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று உற்சவர் பெருமாளான பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் இன்று சிரவணத்தன்று, ரதா ரோஹணம் (கோ ரதத்தில்) எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, ரதா ரோஹணம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரதா ரோஹணத்தை வடம் பிடித்து இழத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் நேத்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் 10ம் நாளான நாளை வெள்ளிக்கிழமை காலை மூலவர் திருமஞ்சனமும், நண்பகல் அன்னப்பாவாடை உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான புரட்டாசி பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.


