ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது
நத்தம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. நல்வாய்ப்பாக பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பணிமனையில் இருந்து வி.எஸ்.கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து பின்னர் மீண்டும் வி.எஸ்.கோட்டையிலிருந்து சுமார் 30 பயணிகளுடன் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கோபால்பட்டி பாறைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் தவிப்பதற்காக ஓட்டுநர் பேருந்து திருப்ப முயற்சித்துள்ளார்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென இறங்கியது. இதனால் பயணிகள் அலறியபடி பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு ஜேசிபி வாகனம் மூலம் கயிறு கட்டி அரசு பேருந்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


