கைகளைக் கட்டிய நிலையில் தொங்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி
தாராபுரம் அருகே கைகளைக் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி மரணம் – தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை!..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40) கூலி வேலை செய்து வந்தவர். கடந்த ஜூன் 26-ம் தேதி, சென்னாக்கள் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்ட பகுதியில், வேப்பமரத்தில் அவர் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இது தொடர்பாக அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீராத நோய் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறினர். ஆனால் அவரது மரணம் சந்தேகத்திற்குரியது என்று பல சமூக அமைப்புகள் தெரிவித்தன.
தமிழ் புலிகள் கட்சி முகிலரசன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன், மற்றும் தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர், தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையர் தமிழ்வாணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து தமிழ்வாணன் சென்னாக்கல்பாளையம் கிராமத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் நேற்று அந்தக் கிராமத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, முருகனின் மரணம் குறித்து முன்பே மனு கொடுத்த சமூக அமைப்பினர் மீண்டும் ஆணையர் முன் ஆஜராகினர்.
அவர்கள் கூறியதாவது:
முருகனின் மரணம் எளிதாக முடிவுகூற முடியாத சந்தேகப்பூர்வமானது.
இதற்குப் பொறுப்பாளிகளை கைது செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


