இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
அனுமதி இல்லாத வழிதடத்தில் அதிவேகமாக மினி பேருந்தை இயக்கிய இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு. மினி பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கலைக் கல்லூரியில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவிகளுக்கு காலை நேரம் மற்றும் பிற்பகல் நேரங்களில் பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்திக்கொண்டு சில தனியார் பேருந்துகள் கல்லூரியில் இருந்து அனுமதி இல்லாமல் – பர்மிட் இல்லாத வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் கல்லூரி மாணவிகளை ஏற்றுவதற்காக அனுமதி இல்லாத வழித்தடத்தில் வேகமாக வந்த மினி பேருந்து இராஜப்ப நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பூதலூரை சேர்ந்த அன்பானந்தன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை தொடர்ந்து மினி பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


