பேரூராட்சி செயல் அலுவலர் அறையின் கதவு கண்ணாடி உடைப்பு – சம்பவம் தொடர்பாக இருவர் சிறையில் அடைப்பு.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் அறையின் கதவு கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு.
புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக டெங்கு பணியாளராக பணிபுரிந்து வரும் மாயவேல் என்பவருக்கும், பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணி புரியும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 25ஆம் தேதி வண்டி நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர் மாயவேல் தனது சகோதர் மாது என்பவரை அழைத்து வந்து பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து செயல் அலுவலரின் அறையில் இருந்த கதவின் கண்ணாடியை குத்தி உடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் லெனின் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து காட்சிகளின் அடிப்படையில்,
ஆதிவராகநத்தம் ஜீவானந்தம் தெருவில் வசித்து வரும் ராமலிங்கம் மகன் தற்காலிக டெங்கு பணியாளர் மாயவேல்( 40) மற்றும் அவரது சகோதரர் மாது (34) ஆகிய இருவர் மீதும் பொது சொத்தை சேதப்படுத்தியது, கொலை மிரட்டல், அரசு பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


