அதிபத்த நாயனார் கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா புனித நீர் ஊர்வலம்
அதிபத்த நாயனார் கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருவிழாவிற்காக 9, புண்ணிய நதிகளில் இருந்து யானை மேல் கோலாகலமாக கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம்; பிரம்மாண்டமாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில், மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடிவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்;*

63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்பெற்ற அதிபத்த நாயனார் அவதரித்த நாகை மாவட்டம் நம்பியார் நகரில் கற்க்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் அஷ்ட பந்தன குடமுழுக்கு பெருவிழா வருகின்ற 5,ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட 9, புண்ணிய நதிகளில் இருந்து புனித நீரானது கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து இன்று கலச தீர்த்தம் யானையின் மேல் எடுத்து வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில், நாதஸ்வர மேளக்கச்சேரி, ட்ரம்ஸ் இசையுடன், கரகாட்டம் மானாட்டம் மயிலாட்டம் சிலம்பாட்டம் கும்மியாட்டம் என களை கட்டியது.

அப்போது அதிபத்த நாயனார் மற்றும் மாரியம்மனுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி பக்தி பரவசத்துடன் நம்பியார் நகரில் உள்ள அதிபத்த நாயனார் கோவில் வரை முளைப்பாரி சுமந்து வந்தனர்.
இதைப்போல் சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடி உற்சாகத்துடன் புனித நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கலச தீர்த்தம் ஊர்வலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.


