10 நாட்கள் திருவிழாவில் 750 டன் குப்பை
வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவில் 10 நாட்களில் 750 டன் குப்பைகள் குவிந்தது; வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மூலம் 450 பணியாளர்கள் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டது:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது இந்த ஆண்டு திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்து கொண்டனர்.
அதிக மக்கள் கூடும் உலக பிரசித்தி பெற்ற இந்த ஆண்டு திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகம் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் வேளாங்கண்ணி பேராலயம் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பாக வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மூலம் செய்யப்பட்டது.
குறிப்பாக நடப்பாண்டு நடைபெற்ற இந்த திருவிழா காலத்தில் வேளாங்கண்ணி கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டதோடு கடலில் தடுப்பு கட்டைகள் கட்டியும் அதற்கடுத்து ஒளிரும் வலைகளை கட்டியும் பேரூராட்சிக்கு சொந்தமான படகு மூலம் பயிற்சி பெற்ற 6 கடல் மீட்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு எச்சரிக்கை விடுத்ததால் கடலில் மூழ்கி எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சுகாதார துறையில் முழு கவனம் செலுத்தப்பட்டதால் நகரில் எங்கும் குப்பைகள் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குப்பைகளை உடனுக்குடன் அகற்றி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வதற்காக அதிக அளவிலான குப்பை ஏற்றும் வாகனங்கள் ட்ராக்டர்கள் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
திருவிழா நடைபெற்ற 11 நாட்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சுமார் 750 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் வேளாங்கண்ணி குப்பை கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


