72 அடி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் அபிஷேகம்
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மை பெற வேண்டி உலகிலேயே மிக உயரமான 72 அடி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் தயிர், பால், இளநீர், குங்குமம், விபூதி, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 72 அடி உயர மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.
மிக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்கு சென்று மகா பிரத்தியங்கிரா தேவியை தரிசனம் செய்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை பணக்கஷ்டம், நோய்களிலிருந்து விடுபடுதல், புத்திர பாக்கியம், உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகமாகும்.
தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்து உலக நன்மை வேண்டியும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலம் பெற வேண்டும் என மகா பிரத்தியங்கிரா தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1008 லிட்டர் தயிர் மற்றும் பால் 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தலா 108 கிலோ குங்குமம், விபூதி, சந்தனம், சந்தனம், பச்சரிசி மாவு, ஆகியவற்றால் தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு தொடங்கிய மகா அபிஷேகம் இரவு வரை இடைவிடாமல் 12 மணி நேரம் நடைபெறுகிறது. இந்த மகா அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு மகா பிரத்தியங்கிரா தேவியை தரிசனம் செய்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்று தலைமை அர்ச்சகர் பாலு தெரிவித்தார்.
இந்த மகா அபிஷேகத்தில் புதுச்சேரி மட்டும் இன்றி சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகா பிரத்தியங்கிரா காளி தேவியை தரிசனம் செய்து சென்றனர்.