திருவாடனை அருகே உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 12 திமுக கொடிகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணன் மற்றும் சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜெயபிரகாசம் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அறிவு என்பவர், உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி 12 திமுக கொடிகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை திருவாடனை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய அனுமதியின்றி கட்சிப் பொருட்களைக் கொண்டு சென்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


