திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் 1008 சங்காபிஷேகம்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அனுதினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் சன்னதி எதிரே யாக சாலைகள் அமைக்கப்பட்டு அதனை சுற்றி தரையில் நெல் பறப்பப்பட்டு அதில் 1008 சங்கு வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹதி நடைபெற்று 1008 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.


