பேருந்தை வழிமறித்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பேருந்து நிற்காத இடத்தில் நிற்கச் சொல்லி இளைஞர்கள் சிலர் தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு தனியார் பேருந்து நேற்று சென்றுள்ளது. பேருந்தில் ஏறிய இரண்டு இளைஞர்கள் பேருந்து பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். பேருந்து ஓட்டுனர் அங்கு நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி அதற்கு அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த பேருந்து தஞ்சாவூருக்கு சென்று விட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது தஞ்சாவூருக்கும் கும்பகோணம் நெடுஞ்சாலையில் உத்தாணி பிரிவு சாலை அருகே பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேருந்திற்குள் ஏறி உத்தாணி கிராமத்தில் பேருந்தில் நிற்காமல் சென்றால் கொன்று விடுவோம் எனவும், பேருந்தை அடித்து உடைத்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதனால், அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.