சிதம்பரம் அருகே மணலூர் உணவு சேமிப்பு கிடங்கில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
சிதம்பரம் அருகே மணலூர் உணவு சேமிப்பு கிடங்கில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் உணவு சேமிப்பு கிடங்கு நிறுவனம் இருக்கிறது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு பணியில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள சேமிப்பு கிடங்கு நிறுவனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணி நியமனம், சலுகைகள், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட செயலாளர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குழந்தைவேலு,
சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதற்காக பலமுறை போராடியும் எந்தவித பலனும் இல்லை. அதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நடத்தி வருகிறோம்.

இந்த மணலூர் உணவு கிடங்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகிறோம். குறைவான பணியாளர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை களைய அரசு முன்வர வேண்டும் என கூறினார்.


