இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது வெடி மருந்து வெடித்து ஏற்பட்ட விபத்தில் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்
தமிழக பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடிவிட்டு புதுச்சேரி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது வெடி மருந்து வெடித்து ஏற்பட்ட விபத்தில் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்,படுகாயம் அடைந்த கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் அமாவாசை (வயது 60) இவரது மனைவி செரீனா (52) இவர்களின் மருமகன் பாண்டியன், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேரும், திருவக்கரை, மயிலம், செஞ்சி திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளி மற்றும் காட்டுப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் வியாபாரம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று இரவு, அமாவாசை அவரது மனைவி செரீனா இருவரும் ஒரு இருசக்கர வாகனத்திலும், அவரது மருமகன் பாண்டியன் தனியாக ஒரு வாகனத்திலும் வேட்டையாட சென்றுள்ளனர்.
விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடிவிட்டு பாண்டியன் தனியாக சென்ற நிலையில், செரீனா மற்றும் அவரது கணவர் அமாவாசை ஆகிய இருவரும் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் அருகே சென்ற போது விலங்குகளை வேட்டையாட வைத்திருந்து வெடி மருந்து திடீரென வெடித்து சிதறியது, இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செரீனா துடிதுடித்து உயிரிழந்தார் படுகாயம் அடைந்த அமாவாசை உயிருக்கு போராடினார். இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி சுப்பிரமணியன் தலைமையிலான வில்லியனூர் போலீசார் உயிரிழந்த செரீனாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், படுகாயம் அடைந்த அமாவாசையை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வில்லியனூர் போலீசார் இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிமருந்து வெடித்து தான் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி புதுச்சேரிகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


