in

சங்கிலியுடன் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சங்கிலியுடன் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.

 

MMC அலுவலகத்தை சங்கிலியுடன் முற்றுகைக்கு வியாபாரிகள் போராட்டம். கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.

மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்ய கூடாது என வலியுறுத்தல். பணிகளுக்கு அபராதம் பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை சந்தையை பராமரிப்பதில் காட்ட வேண்டும் என விமர்சனம். கோயம்பேட்டில் உள்ள MMC அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை கோயம்பேடு பகுதியில் பெரியார் காய்கறி சந்தை சென்னை மாநகராட்சியின் MMC நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில் MMC நிர்வாகத்தின் பராமரிப்பில் குறை இருப்பதாக கூறி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது கழிவறை பராமரிப்பு, மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது, மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கையில் சங்கிலியுடன் வந்த வியாபாரிகள் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிஎம்டிஏ நிர்வாகத்தை இழுத்து பூட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், “கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருந்ததால் கழிவறைகளை போராட்டம் செய்து திறக்க வைத்தோம். ஆனால் அந்த கழிவறைகள் எதுவும் MMC நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

வியாபாரிகள் மற்றும் மக்கள் கழிவறைக்குள் அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தக் கழிவறையை MMC அதிகாரிகள் பயன்படுத்துவார்களா? கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்துவதில் அதிகாரிகளுக்கு ஏன் இந்த அலட்சியம்? இதுமட்டுமின்றி மொத்த வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தங்கள் கடையின் பின்பக்க கதவு வழியாக சில்லறை வியாபாரமும் செய்கின்றனர்.

இதனால் கோயம்பேடு சந்தையில் ஏராளமான சில்லறை கடைகள் மூடப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தையை சுற்றி மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு இன்றி ஆபத்தான முறையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. அதிகாரிகள் அபராதம் விதிப்பதற்காக இலக்கு வைத்து வசூலிக்கின்றனர்.

ஆனால் ஆபத்தான முறையில் திறந்திருக்கும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதில் அவர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. எங்களது இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஒரு வாரத்திற்குள் MMC நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இல்லையென்றால் MMC நிர்வாகத்தை சங்கிலி போட்டு இழுத்து கூட்டு போராட்டம் நடைபெறும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

What do you think?

பட்டப் பகலில் பட்டாகத்தியால் வெட்டப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சுற்று பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் முடிவு