50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ராஜபாளையம் அருகே பழங்குடியினர் காலனிக்கு செல்லும் பாதையை தனிநபர் அடைத்ததாகவும், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதூரில் இருந்து மேற்கே செல்லும் வழியில் பழங்குடியினர் சுமார் 50 குடும்பத்தினர் வசிக்கும் காட்டுநாயக்கன் காலனி உள்ளது. இந்த காலனி மற்றும் கோயில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை தன்னுடைய நிலத்தில் அமைந்திருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாச பாண்டியன் என்பவர் வேலியிட்டு பாதையை அடைத்து விட்டார்.

தகவல் அறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். விரைவில் பாதை மீட்கப்படும் என உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் குழந்தைகளுடன் இன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதை அடைக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணாக்கர்கள், நோயாளிகள், பெண்கள் என அனைத்து வயதினரும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.
இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் குறைவு ஏற்பட்ட ஒருவரை ஊரை சுற்றி கொண்டு செல்லும் முன்னதாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர். பாதை மீட்கப்படும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேற மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


