இரண்டு லட்சம் முட்டை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
நாமக்கல்லில் முட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களே, கடை ஹோட்டல்களுக்கு நேரில் விற்பனை செய்வதால் தமிழகம் முழுவதிலும் இரண்டு லட்சம் முட்டை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது ! நாள்தோறும் முட்டை விலை நிர்ணயிப்பதை மாற்றி வாரத்திற்கு இரு நாள் என்ற பழைய முறையை தொடர வேண்டும் – நெல்லையில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு
தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…
முட்டை வியாபாரிகளுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சங்கத்தை தயார் செய்து வருகிறோம். சங்கத்தின் மூலம் எங்களது கோரிக்கைகளை அரசுக்கும், நாமக்கல் முட்டை பண்ணையாளர்களுக்கும் கொடுக்க இருக்கிறோம். முட்டை உற்பத்தி செய்யும் நாமக்கல் டிரேடர்ஸ், நேரடியாக விற்பனைக்கு வந்து விட்டார்கள்.
இதனால் லட்சக்கணக்கான முட்டை வியாபாரிகளுக்கு செல்ல வேண்டிய லாபம் நேரடியாக முட்டை பண்ணைக்காரர்களுக்கே செல்லும் நிலை உள்ளது. எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக எங்கள் சங்கத்தை ஒருங்கிணைத்து வருகிறோம். திங்கட்கிழமை, வியாழக்கிழமை என வாரம் இரு நாட்கள் மட்டும் முட்டை விலை நிர்ணயிக்கும் சந்தை நடந்தது. ஆனால் இப்போது தினம் தினம் முட்டை விலை நிர்ணயிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் லாட்டரி சீட்டு தொழில் போல, தங்கம் போல ஒவ்வொரு நாளும் முட்டைக்கான விலை அறிவிப்பதால் , வியாபாரிகள் பணம் முதலீடு செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது.
மாலையில் 5 ரூபா என முட்டைக்கு விலை வைக்கிறார்கள். மறுநாள் முட்டைக்கு 40 பைசா குறைத்து விடுகிறார்கள். இதனால் ஒரு லோடுக்கு 40 காசு என குறைக்கும்போது 50,000 வரை நஷ்டம் ஏற்படுகிறது. முட்டை உற்பத்தி செய்யும் பண்ணைக்காரர்களும் முட்டைக்கான பணத்தை முழுவதும் பெற்றுக் கொண்டுதான் வழங்குகிறார்கள்.
ஆனால் நஷ்டமானால், முழுமையும் வியாபாரிகள் தலையில் தான் விழுகிறது. கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனை உள்ளது. இதனால் பாதி முட்டை வியாபாரிகள் தொழிலை விட்டே வெளியேறி விட்டனர். இருக்கின்ற முட்டை வியாபாரிகளை ஒருங்கிணைத்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க முட்டை வியாபாரிகள் சங்கம் என உருவாக்கி இருக்கிறோம்.
இதற்கு முன்பு வியாபாரிகள் வழியாக மட்டும் தான் முட்டை கொடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது பலசரக்கு கடை தொடங்கி ஹோட்டல் என அனைத்திற்கும் நேரடியாக முட்டை பண்ணை உற்பத்தியாளர்களே நேரில் சென்று வழங்குகின்றனர்.
இந்த நிலை மாற வருகின்ற டிசம்பர் மாதம் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் கோரிக்கைகள் எழுப்பவும் அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாமக்கல் பண்ணையில் இருந்து புறப்படும் லாரிகளை நிறுத்த இருக்கிறோம். இதனால் தமிழக மக்களுக்கு முட்டை கிடைக்காது.

தமிழ்நாட்டில் முட்டை வியாபாரிகள் இரண்டு லட்சம் பேர் இருப்பார்கள். 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதித்து கிடக்கிறது என தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டி தெரிவித்தார்.


