திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் கண்ணாடி ரிஷப வாகனம்
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் நான்கு மாட வீதியில் உலா…..
வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அனுதினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு வண்ண வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மற்றும் சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதியில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


