பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று அதிகாலை வின்ச் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகச் சேவை நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்காக தினமும் காலை 6 மணி முதல் வின்ச் மற்றும் ரோப்கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை வின்ச் சேவையைத் தொடங்கியபோது, இயந்திரப் பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இயந்திரத்திலிருந்து தீப்பொறிகள் சிதறியதைக் கண்ட ஊழியர்கள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக வின்ச் இயக்கத்தை நிறுத்தினர். இதன் காரணமாக அதிகாலை தரிசனத்திற்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயில் செல்ல முடியாமல் வின்ச் நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் உருவானது.
தகவலறிந்து வந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மின்சாரத் துறைப் பணியாளர்கள் இணைந்து மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து, பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணிகள் முடிவடையச் சில மணிநேரம் தாமதமாகும் என்பதால், பராமரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே வின்ச் சேவை மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுவரை பக்தர்கள் சிரமத்தைத் தவிர்க்க படிப்பாதை, யானைப்பாதை அல்லது ரோப்கார் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


