in

மஞ்சள் குலை–கரும்பு அலங்காரத்தில் சங்கிலி பூதத்தார்: மார்கழி ஞாயிற்று மகா தரிசனம்

மஞ்சள் குலை–கரும்பு அலங்காரத்தில் சங்கிலி பூதத்தார்: மார்கழி ஞாயிற்று மகா தரிசனம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அணை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் பாறைக்குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் (சாஸ்தா) திருக்கோயிலில் மார்கழி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

இந்தக் கோயில் சாஸ்தாவின் முதல் திருத்தலமாக கருதப்படுகிறது. இங்கு சுவாமி அய்யனார் பூரணா – புஷ்கலை தேவிகளுடன் அருள்பாலிக்க, சங்கிலி பூதத்தார் மற்றும் மொட்டையன் சுவாமிகள் மணி விழுங்கி மரத்தின் கீழ் நாட்டார் தெய்வங்களாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனர்.

சங்கிலி பூதத்தார் மற்றும் மொட்டையன் சாமிக்கு 200 கரும்புகள், 101 மஞ்சள் குலைகள், மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பகல் பூஜையில் சாஸ்தாவுக்கு வடை மாலைகள், சர்க்கரை பொங்கல், பழங்கள், இளநீர் உள்ளிட்ட படையல்கள் படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக காணிக்கைகள் செலுத்தினர். குறிப்பாக பல பக்தர்கள் சங்கிலியால் தம்மையே அடித்துக்கொண்டு, சங்கிலி பூதத்தாரிடம் தங்களது நேர்ச்சை கடன்களை செலுத்தியது காண்போர் கண்களை ஈர்த்தது.

மேலவாசல் பூதத்தார் மாதாந்திர பூஜைக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசித்து சிறப்பு அருள் பெற்றனர்.

மார்கழி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த பூஜை, பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் ஆன்மீக உற்சாகமும் நிறைந்ததாக அமைந்தது.

What do you think?

“ரெட் கார்டு கொடுத்தாலும் எங்க தலைவன் கெத்து குறையல

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆக மொட்டை அடிச்சு நேர்த்திக்கடன்