விருத்தாசலம் அருகே சாலை வசதி,பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெரியகாப்பான்குளம், சின்ன காப்பான்குளம், கயிகளக்குப்பம் பகுதிக்கு பல வருடங்களாக கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும், 5 கிலோ மீட்டர் நடந்து சென்று நெய்வேலி மற்றும் விருத்தாசலம் பகுதிக்கு உள்ள பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும்,
பொதுமக்கள் தங்கள் வேலை நேரத்தில் சரியாக வேலைக்கு செல்ல முடியாத காரணத்தாலும், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும்,
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், 3 கிராம மக்கள் திடீரென விருத்தாச்சலம் – பண்ருட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த நெய்வேலி காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக இதற்கான தீர்வை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

