பட்டாகத்தியால் வெட்டப்பட்டவர் உடலை, வாங்க மறுத்த உறவினர்கள் மற்றும் ஜமாத்தார்கள்.
நீடூரில் பட்டாகத்தியால் நடுரோட்டில் வெட்டப்பட்டவர் உயிரிழந்த சம்பவம், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நீடூர் ஜமாத்தார்கள் சாலை மறியல் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த முகமது ஹாலிக் என்பவர் நேற்று நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் இன்று மாலைக்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார் என காவல்துறை அறிவித்த நிலையில் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. இந்நிலையில் உடற்கூறு ஆய்வு நிறைவடைந்த நிலையில் இறந்த முகமது ஹாலிக்கின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.

மேலும் நீடூர் கடைவீதியில், உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் நீடூர் ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நீடூர் வழியாக மணல்மேடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை வட்டாட்சியர் மற்றும் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நாளை மாலைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


