இரயில்வே சுரங்கப்பாதை வேண்டாம் என்று சுரங்கப்பாதைக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் தண்டரை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை வேண்டாம் என்று கிராம மக்கள் சுரங்கப்பாதைக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் தண்டரை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. நெல், மணிலா மற்றும் கரும்பு அதிக அளவு பயிர் செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு பிரதான தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக தண்டரை கிராம சாலை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தண்டரை கிராமத்தில் ரயில்வே பாதை இருப்பதால் அந்த இடத்திற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
தண்டரை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டாம் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 15 அடி ஆழம் பள்ளம் தோண்டிய பிறகு அந்த பள்ளத்திலிருந்து தண்ணீர் வந்ததால் பள்ளம் தோண்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த பள்ளத்தில் இன்று தண்டரை கிராம மக்கள் இறங்கி தங்களுக்கு ரயில்வே சுரங்கப்பாதை வேண்டாம் என்றும் தங்களுக்கு மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஏரிக்கு அருகே 10 அடி தூரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பள்ளம் தோண்டியதால் தற்போது தண்ணீர் வந்ததாகவும், சுரங்கப்பாதை முழுவதும் அமைக்கும் பணிகள் முடிவு பெற்ற பின்னர் மழை காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் என்றும்.
இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதுடன் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தங்களால் மாற்று இடத்திற்கு சென்று வர முடியாத நிலை ஏற்படும் என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
இது மட்டுமின்றி விவசாய பொருட்களை எடுத்துச் செல்லவோ அல்லது கரும்புகளை ஏற்றிச் செல்லவோ சுரங்கப்பாதை வழியாக லாரிகள் செல்ல இயலாது என்பதால் தங்களுக்கு சுரங்கப்பாதை வேண்டாம் என்றும் தங்கள் பகுதிக்கு மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று தோண்டிய பள்ளத்தில் இறங்கி நின்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
