சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பூசாரி
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படி தாரர்களின் சார்பாக கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா மற்றும் ஊர் விளையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றது. இதற்காக வடமதுரை மங்கம்மாள் கேணி அருகே 15 அடி சுற்றளவில் குழி அமைக்கப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து பூசாரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவர் ஒரு கையில் தீப்பந்தம், மறு கையில் சாட்டை ஏந்தி, சாட்டையால் தன்னை அடித்தவாறே பூக்குழி இறங்கும் இடத்திற்கு சென்று அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு குறி சொல்லி, ஆசி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பூசாரி முதலில் பூக்குழி இறங்கினார்.
அவரைத்தொடர்ந்து வரிசையில் நின்றிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 4 ஆயிரம் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓம் சக்தி பராசக்தி என்று கோஷம் முழங்கியபடி பக்தி பரவசத்துடன் விடிய விடிய பூக்குழி இறங்கி, தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த பூக்குழி திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


