விவசாய கிணற்றில் விஷம் கலந்த மர்மம்: பயிர்கள் கருகி நாசம், பசுமாடுகள் பாதிப்பு
தாராபுரம் அருகே “விவசாய கிணற்றில் விஷம் கலந்த மர்மம்: பயிர்கள் கருகி நாசம், பசுமாடுகள் பாதிப்பு – பொம்மநல்லூர் கிராமத்தில் பரபரப்பு”
தாராபுரத்தை அடுத்த மேட்டுவலசு பொம்மநல்லூர் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி தன் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். தனது சொந்த தோட்டத்தில் ஆடு, மாடு மேய்த்து வளர்ப்பதோடு, விவசாயம் செய்தும் தனது குடும்பம் நடத்தி வருகிறார்.
அவர் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மர்ம நபர்கள் விஷம் கலந்துவிட்டு சென்றுள்ளனர். இந்த விஷமிகுந்த தண்ணீரை அருந்திய பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனுடன், அந்த தண்ணீரை பயன்படுத்திய விவசாயப் பயிர்கள் கருகி நாசமடைந்துள்ளன. மேலும் கோழி, ஆடு, மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வேதனையுடன் நிலத்தில் பயிர்கள் அழிந்து, பசுக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயி கிருஷ்ணசாமி தற்போது மற்றொரு ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த முயன்றபோதும் அதிலும் விஷத்தின் தாக்கம் பரவி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
தற்போது அவர் குடிக்கவும், குளிக்கவும், மாடுகளை பராமரிக்கவும் வெளியிலிருந்து லாரிகள் மூலம் வழியாகத் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுபோன்ற அதிர்ச்சியான சூழ்நிலையில், கிருஷ்ணசாமி தனது குடும்பத்துடன் சென்று, தாராபுரம் வட்டாட்சியர் திரவியம் மற்றும் அலங்கியம் காவல் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
மேலும், இவர் அளித்துள்ள தகவலில், இந்தத் தீச்செயலை மேற்கொண்டிருக்கக்கூடிய சந்தேக நபர்களாக ரத்தினசாமி, பாலச்சந்திரன், திருமலைசாமி, செல்லாத்தாள், குமாரசாமி, செல்லமுத்து, சித்ராதேவி, சௌந்தர்யா ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.
இவர்கள் விவசாய நிலத்தை அபகரிக்கவும், அவரது மகள்கள் கல்வியில் முன்னேறி அரசு வேலைக்கு செல்லும் வாய்ப்பை தடுக்கும் நோக்கிலும் இந்த செயலை செய்திருக்கலாம் என கண்ணீர் மல்க அவர் கூறுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்து, கிணற்றில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக லேபரட்டரிக்குப் அனுப்பி, எந்த வகையான விஷம் கலக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம விவசாயிகளின் ஒருமனத்த கோரிக்கையாக உள்ளது.
