தொண்டி கடலில் ஏவுகணை போன்ற மர்மப் பொருள்? மீனவர்களுக்குத் தடை!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் திருப்பாலைக்குடி கடல் பகுதிகளில் ஏவுகணை போன்ற மர்மப் பொருள் ஒன்று மிதந்து வருவதாகப் பரவி வரும் தகவலால், கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் யாரும் அந்தப் பொருளைத் தொடவோ, கரைக்கு எடுத்து வரவோ கூடாது என மரைன் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சர்வதேச அளவில் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடல் வழியாகப் பல்வேறு ஆயுதங்கள் அல்லது ஏவுகணைகள் கடத்தப்படவோ அல்லது தாக்குதலுக்கு உள்ளாகவோ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தொண்டி கடல் பகுதியில் உருளை வடிவிலான, ஏவுகணை அல்லது எரிவாயு சிலிண்டர் போன்ற ஒரு மர்மப் பொருள் மிதப்பதாக மீனவர்கள் மூலம் கடலோரப் பாதுகாப்புப் குழும (மரைன்) போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


தகவல் கிடைத்தவுடன் உஷாரான மரைன் போலீசார், உடனடியாக கீழ்க்கண்ட கடலோரக் கிராமங்களுக்கு அவசரத் தகவலைத் தெரிவித்துள்ளனர்:
தொண்டி,நம்புதாளை சோலியக்குடி, தேவிபட்டினம், முள்ளிமுனை, மற்றும் மோர்ப்பண்ணை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
கடலில் மிதந்து வரும் அந்த மர்மப் பொருளை எக்காரணம் கொண்டும் நெருங்குவதோ, கைகளால் தொடுவதோ அல்லது படகுகளில் ஏற்றி கரைக்குக் கொண்டு வருவதோ கூடாது.
அந்தப் பொருள் எந்தத் திசையில் மிதந்து செல்கிறது என்பது குறித்துத் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது ரோந்துப் பணியில் உள்ள மரைன் போலீசாருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த எச்சரிக்கை காரணமாகத் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கடலோரக் கிராமங்களில் மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.
அந்தப் பொருள் உண்மையிலேயே ஏவுகணையா அல்லது விண்வெளி ஆய்வு மையத்தின் கழிவுப் பொருளா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் தற்போது அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


