தாளடி சாகுபடிக்கான சேற்று உழவு பணி தீவிரம்
நாகை மாவட்டத்தில் தாளடி சாகுபடிக்கான சேற்று உழவு பணி தீவிரம்: இறைதேடி குவிந்த வெண்ணரைகளால் வெண்ப போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கும் வயல்வெளிகள் காண்பவர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாகை மாவட்டம் முழுவதும் தாளடி சாகுபடி உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடைப்பணிகள் ஏறக்குறைய 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
குறுவை அறுவடை முடிந்த விளைநிலங்களில், விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் சேற்று உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை, குண்டையூர், சுந்தரபாண்டியம், வலிவலம், கீழவெளி, அனக்குடி, சாட்டியக்குடி, முப்பத்திகோட்டகம், இறையான்குடி, தெற்கு மற்றும் வடக்கு பனையூர், களத்திடல்கரை, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாளடி சாகுபடிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சேற்று உழவு மேற்கொள்ளும் வயல்வெளிகளில் உள்ள சிறு பூச்சிகளை உண்பதற்காக வெண்ணரைகள் பெருமளவில் குவிந்துள்ளன.
வயல்வெளிகளை வெண்போர்வைப் போர்த்தியது போன்ற தோற்றத்தில் வெண்ணரைகள் அமர்ந்திருப்பதும், டிராக்டர்கள் நகரும் போது அவை எழுந்து பறப்பதும், காண்போர் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தாளடி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், உரம், விதைநெல் மற்றும் வங்கிக் கடன்கள் போன்ற தேவைகள் தாமதமின்றி கிடைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


