நாமக்கல் நகரில் ஸ்ரீ வல்லப விநாயகர், ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் மகா கும்பாபிஷேக விழா!
நாமக்கல்- மோகனூர் சாலை கூட்டுறவு காலனியில் உள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலில், வல்லப விநாயகர், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, நூதன ஆலய மஹா கும்பாபிஷேக விழா, டிசம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மகா கணபதி ஹோமம், யாகமும், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி
நடந்தது.
இதையடுத்து யந்திரஸ்தாபனம், சாமிகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை யாக பூஜையும், திங்கட்கிழமை காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ வல்லப விநாயகர், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை வல்லப விநாயகர் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


