மேல்மலையனூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை …
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவில் சுமார் 55 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான அருள்மிகு அங்காளம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
இத்திருகோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் அமாவாசை தினங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் கூடுவதால் மேல்மலையனூர் சுற்று வட்டார பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
இவ்வாறு பக்தர்கள் அதிகம் கூடும் பகுதியில் அரசு பொது மருத்துவமனை இல்லாத நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் போதிய மருத்துவ வசதி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் பாதிக்கப்படுபவருக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கும் பாதிக்கப்பட்டவர் களை சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.

வளத்தியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில் அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தினாலும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தினாலும், அப்பகுதி மக்கள் மருத்துவ வசதியை பெறுவதில் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே மேல்மலையனூர் தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை அமைத்து பல்வேறு சிகிச்சைகளை கிராம மக்கள் அவ்மருத்துவ மனையில் பெற்று பயனடைய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மேல்மலையனூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பொது மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் …..


