திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணிகள் தீவிரம்.
நவகிரகங்களில் புதனுக்கு உரிய ஆலயமானதும், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேக பணிகள் தீவிரம், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சொந்த ஊர் கோயில் என்பதால் 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும்.
இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் ஏழாம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற 9 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.
நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலையில், அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடைபெறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதுமட்டுமன்றி கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலையாக போடப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக முதலமைச்சர். மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். திருமதி துர்கா ஸ்டாலின் தந்தையார் இல்லம் திருவெண்காடு கீழரத வீதியில் அமைந்துள்ள நிலையில், தனது சொந்த கிராம கோயிலுக்கு அடிக்கடி வரும் திருமதி துர்கா ஸ்டாலின் காரணமாகவே 12 ஆண்டுகள் பூர்த்தியாக திருவெண்காடு ஆலயத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தீர்த்த குளங்களில் ஒன்றான சந்திர தீர்த்தத்தின் கரையில் ஆகம விதிமுறைகளை மீறி கருங்கல் மண்டபம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பாழடைந்து உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.