காலபைரவருக்கு கார்த்திகை மாத பைரவாஷ்டமி பூஜை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தர்மசம் வர்த்தினி உடனமர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு கார்த்திகை மாத பைரவாஷ்டமி பூஜை வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் அதிகாலை விநாயகர் பூஜை தொடர்ந்து புண்யாக வாசனை, பஞ்ச காவியம், ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் போன்றவை நடைபெற்றது.
தொடர்ந்து யாக பூஜையில் கே. உமாபதி சிவம், கே. தட்சிணாமூர்த்தி சிவம், ஸ்ரீ மது தில்லைநாதசிவம் உள்ளிட்ட 11 சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்விகள் நடத்தினர்.
பின்னர் கோவிலில் காலபைரவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், தேன், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான மங்கள வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தி பின்னர் தொடர்ந்து கோவிலை சுற்றி கலச நீர் சிவாய வாத்தியங்களுடன், சுற்றி வந்து காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு மலர்கள் மற்றும் சந்தனம் காப்பு அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

பைரவ அஷ்டமி பூஜையில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கால பைரவாஷ்டமி பூஜையின் கட்டளைதாரர்கள் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


