அமெரிக்கா மிரட்டியவுடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 14 சதவீதம் குறைத்து விட்டது இந்தியா
அமெரிக்கா மிரட்டியவுடன் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 14 சதவீதம் குறைத்து விட்டது. இந்தியாவிற்கு பாஜக செய்த கேடுகளில் இதுவும் ஒன்று. சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி. ஒரு சிறிய விஷயத்திற்காக விசிக தலைவர் திருமாவளவனை நசுக்க முயற்சிப்பதாக அழகிரி குற்றச்சாட்டு. தேசிய தலைவராக அவர் இருப்பதை பிடிக்காதவர்கள் பெரிது படுத்துவதாகவும் கருத்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று இரவு சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
இந்தியா ஏழ்மை நாடாக இருந்தபோது கூட இந்திரா காந்தி அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் நம்முடைய நலனுக்கு எதிராக பேசுகிறபோது அவர்களை தள்ளி வைக்க தயாராக இருந்தார். அமெரிக்காவில் இருந்து கோதுமை வாங்குவது நிறுத்தப்பட்டது. அப்போதுதான் பசுமை புரட்சி தோன்றியது. அன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து இந்திராகாந்தி நின்றார்.
வங்கதேச பிரச்சினையின்போது அமெரிக்கா, சீனாவை எதிர்த்து நின்றார். அமெரிக்காவை எதிர்ப்பதும், பாகிஸ்தானை இரண்டாக துண்டாடுவதும் சாதாரண விஷயம் அல்ல. உலக சாதனை. அவற்றை இந்திராகாந்தி செய்தார். அது வரலாறு. ஆனால் இன்றைக்கு இரண்டு விஷயங்களில் மோடி அரசு தலைக்குப்புற விழுந்து இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு வாங்குவதை அமெரிக்கா மிரட்டியவுடன் 14 சதவீதம் வாங்குவதை நிறுத்தி இருக்கிறோம். இந்த உண்மையை இந்திய அரசாங்கம் சொல்லவில்லை. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள் சொல்கின்றன. இது இந்தியாவிற்கு இழுக்கு.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது விலை குறைவு. அது நமக்கு லாபம் என்கிறார்கள். இன்றைக்கு ஏன் அதை இழக்கிறீர்கள்? எந்த பொருளை எங்கு வாங்க வேண்டும் என்று சொல்வதற்கு அமெரிக்கர்கள் யார்? அதற்கு இந்தியா தலைவணங்குவது ஏன். பாஜகவின் மோடி அரசாங்கம் கீழ்த்தரமாக, ஆண்மையற்று உள்ளது. அமெரிக்காவிலேயே அமெரிக்கர்களுக்கு எதிராக பேசியவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். ஆனால் இன்றைக்கு மோடி கீழ்த்தரமாக நடந்து டிரம்ப்பின் மிரட்டலுக்கு மலிவான கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டு, நமது எண்ணெய் விலையை இன்னும் அதிகமாக்க போகிறார். இந்தியாவிற்கு பாஜக செய்த கேடுகளில் இதுவும் ஒன்று.
தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. சமீப காலமாக திருமாவளவனுக்கு எதிராக பேசுவதற்கு என்று ஒரு பிரிவு உள்ளது. அவருக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அண்ணாமலை, ராஜா என பலரும் பேசுகிறார்கள். திருமாவளவன் கார் மோதிய விஷயத்தை இரண்டு விஷயமாக பார்க்கலாம். திருமாவளவனின் கார் இரு சக்கர வாகனத்தில் இடிக்கவே இல்லை. அருகில் வந்துதான் நின்றது. லேசாக உரசி கூட இருந்திருக்கலாம். அதில் பைக்கில் வந்தவர்கள் முறைத்து கூட இருக்கலாம். தலைவருடன் வந்த விசிக தோழர்கள் கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொண்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. தலைவர் வந்துவிட்டால் தொண்டர்கள் ஆர்வமிகுதியாக இருப்பார்கள்.
திருமாவளவன் வன்முறையை தூண்டுகிறார் என இவர்கள் அந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். இதை பாஜக கையில் எடுத்திருக்கிறது. திருமாவளவன் நாகரீகமான, கொள்கை ரீதியான, பண்பாடு மிக்க அரசியல்வாதி. ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக இதுநாள் வரை கொள்கையை நடைமுறைப்படுத்துபவர். மதச்சார்பின்மை என்ற கொள்கையில் மிக உறுதியாக இருப்பவர். ஆனால் ஒரு சிறிய விஷயத்தில் அவரை நசுக்க முயற்சிக்கிறீர்கள்.
இந்த மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் அவர் தேர்தலில் நின்றபோது அவர் வந்தால் கலவரம் ஏற்படும் என பரப்பினார்கள். ஆனால் அவர் எம்பியான பிறகு அவரால் ஏதாவது சாதிக் கலவரம் நடந்து இருக்கிறதா? சாதி சார்பின்மை என்பதை வட மாவட்டங்களில் இரண்டு பேர் கொண்டிருந்தவர்கள். ஒன்று திருமாவளவன். இன்னொன்று எம்ஆர்கே பன்னீர்செல்வம். வாக்கு விழாத இடங்களில் கூட திருமாவளவனுக்கும், எம்.ஆர்.கே விற்கும் வாக்குகள் விழுந்திருக்கிறது. இவர்கள் இருவரும்தான் வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சித்தார்கள். இதன் பலன் தர்மபுரியிலும் கிடைத்தது. இவை அனைத்தும் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள்.
தென்னிந்தியா முழுவதும் உள்ள அந்த சமூகத்திற்கு திருமாவளவன் தலைவராகவும், தேசிய தலைவராகவும் விளங்குகிறார். இதை பிடிக்காதவர்கள் பெரிது படுத்துகிறார்கள். இது தவறு. உங்கள் தரப்பில் இதுபோன்று தவறு நிகழவில்லையா. மோடி விஷயத்தில் அப்படி நடக்கவில்லையா? குஜராத்தில் 2000 பேரைக் கொன்றார்களே. அதற்கு எத்தனை வீடியோ விட்டார்கள். அன்றைக்கு இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்? நாகரிகம் கருதி அவற்றை ஒரு அளவிற்கு மேல் பெரிதுபடுத்தவில்லை. இந்த பிரச்சினையை பெரிது படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் கூட்டணி கட்சிகள் எல்லாம் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறார்கள். ஆர்வ மிகுதியால் சில தோழர்கள் அவசரப்பட்டு இருப்பார்கள். இரு சக்கர வாகனம் மீது கார் மோதவே இல்லை. இதை பாஜக பெரிதுபடுத்த விரும்புகிறது. விசிக எம்எல்ஏ, எம்பிகள் இதைப்பற்றி பேசினால் அது சமூக நல்லிணக்கத்திற்கு கெடுதலாக முடியும். ஆனால் அண்ணாமலையும், ராஜாவும் சமூக நல்லிணக்கம் கூடாது என்று விரும்புகிறார்கள். இதன் மூலம் தேர்தலில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். இது கோபத்தின், விரக்தியின் வெளிப்பாடு.
எங்களது தலைவர் சொன்னது 100 சதவீதம் உண்மை. வெளியுறவுத் துறையில் நீங்கள் முற்றிலுமாக தோற்று விட்டீர்கள். ஊடுருவல் என்பது மிக அரிதாக நடக்கும். லட்சக்கணக்கில் எப்படி ஊடுருவல் நடக்கும். அசாமில், மேற்கு வங்காளத்தில் எப்போதுமே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 4:30 மணி முதல் 6:30 மணி வரை எல்லா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் 50 டிக்கெட்டுக்கு பதில் 500 பேர் இருப்பார்கள். அவர்களெல்லாம் சென்னையில் வேலை செய்பவர்கள். அவர்கள் ஏறிக்கொள்வார்கள். யாரும் கேட்க முடியாது. இதை தடுக்க கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.


