வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் இன்று மாலை கொடியேற்றம்
உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது
இந்தியாவில் பேராலய அந்தஸ்து பெற்ற 8 தேவாலயங்களில் ஒன்றாகவும், உலக புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரமாகவும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்னை பிறப்பு விழாவுடன் நிறைவுபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்சகணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தஞ்சை மறைமாவட்ட T சகாயராஜ் ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை புனிதம் செய்து வைக்கிறார். இதை தொடர்ந்து பேராலய வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக கொடி பேராலயம் வந்தடையும்.
இதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும் அப்போது அங்கு திரண்டு நிற்கும் லட்சகணக்கான பக்தர்கள் மரியே வாழ்க, ஆவே மரியா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்புவர்.
அதை தொடர்ந்து ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெறும். இந்த ஆண்டு ஆரோக்கிய அன்னை ஆண்டுபெருவிழாவை காண்பதற்காக கடந்த 3 தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபயணமாக வந்து வேளாங்கண்ணியில் தங்கியுள்ளனர்.
அதே போல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியுள்னர். இவ்வாறு பல்வேறு இடங்களில் தங்கியுள்ள பக்தர்கள் இன்று மாலை கொடியேற்ற நிகழ்வில் பங்கு பெறுவர் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கொடியேற்றத்தை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி கடைவீதி சாலை, கடற்கரை சாலை, நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்படும் இதற்காக பக்தர்கள் நலன் கருதி திருவிழா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில், தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் மேற்பார்வையில் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ குமார் முன்னிலையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்ட எஸ்பிகள் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


