பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், 2 மணி நேரமாக விவசாயிகள் சாலை மறியல்.
சீர்காழியில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் சீர்காழி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரமாக விவசாயிகள் சாலை மறியல், போலீசார் தடியடியால் பரபரப்பு.
அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து விலையை குறைத்து ஏலம் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது காலநிலை மாற்றத்தால் மழை காற்று இவற்றில் இருந்து பாதுகாத்து பருத்தியை விற்பனை செய்ய சீர்காழி அருகே உள்ள எருக்கூர் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட மூன்று நாட்களாக பாதுகாத்து வைத்து விற்பனை செய்ய இருந்த நிலையில்,
போதிய வியாபாரிகள் வந்து பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்காமல் கிலோவுக்கு 52 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விலை குறைத்து வியாபாரி விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும், விவசாயிகள் கிலோவுக்கு 60 ரூபாய் வரை செலவு செய்தும் தங்களுக்கு உரிய லாபம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஓரு விவசாயிக்கு ஒரே நிலத்தில் விளைந்த பருத்திக்கு மூன்று விதமான விலை நிர்ணயம் செய்துள்ளதாக விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதை கண்டு அதிர்ந்து போனார். விவசாயிகளை அலட்சியப்படுத்தியதாலும் வியாபாரிகள் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து விலையை குறைத்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் லாபம் பார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி சீர்காழி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கொள்ளிடம் ஆனைக்காரசத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை செய்து உடன்பாடு எட்டாததால் போலீசார் திடீரென கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்து பருத்தி ஏலத்தை ரத்து செய்து புதிய ஏலம் விடுவதாக அறிவித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொண்டனர்.
மேலும், தமிழக அரசு நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போல பருத்திக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது 108(ஆம்புலன்ஸ்)-க்கு விவசாயிகள் வழி விட்டு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


